Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 14, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.

 குறள் 14:

"ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்."

மு.வரதராசனார் உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

பரிமேலழகர் உரை:

உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .

மணக்குடவர் உரை:

ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள்.

Translation:

If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.

Explanation:

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

No comments:

Post a Comment