Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, August 27, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை.

 குறள் 147:

"அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்."

மு.வரதராசனார் உரை:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.

பரிமேலழகர் உரை:

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.).

மணக்குடவர் உரை:

அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அறமாகிய தன்மையுடன் இல்லறத்தில் வாழபவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பில் இருப்பவளது பெண்தன்மையினை விரும்பாதவனே ஆவான்.

Translation:

Who sees the wife, another's own, with no desiring eye

In sure domestic bliss he dwelleth ever virtuously.

Explanation:

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

No comments:

Post a Comment