Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 31, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: புறங்கூறாமை.

 குறள் 183:

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்."

மு.வரதராசனார் உரை:

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

பரிமேலழகர் உரை:

புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.).

மணக்குடவர் உரை:

காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: 

புறம் பேசிப் பொய்ம்மையான வாழ்க்கையில் வாழ்வதைவிட அது செய்யாமல் இறந்துவிடுதல், அறநூல்களில் சொல்லப்படுகின்ற நற்பயனை அவனுக்குத் தருவதாகும்.

Translation:

'This greater gain of virtuous good for man to die,

Than live to slander absent friend, and falsely praise when nigh.

Explanation:

Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

No comments:

Post a Comment