Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, August 25, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.

 குறள் 108:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

மு.வரதராசனார் உரை:

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

பரிமேலழகர் உரை:

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை:

பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பிறர் செய்த நன்மையினை மறப்பது ஒருவற்கு நல்லதல்லல்; யாரார் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுதல் நல்லதாகும்.


Translation:

'This never good to let the thought of good things done thee pass away;

Of things not good, 'this good to rid thy memory that very day.

Explanation:

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).

No comments:

Post a Comment