Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, August 25, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.

 குறள் 105:

"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து."

மு.வரதராசனார் உரை:

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

பரிமேலழகர் உரை:

உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

உதவிக்கு அளவு என்பது இல்லை. அவ்வுதவியினைப் பெற்றுக் கொண்டரவரது நற்குணத் தகுதியின் அறிவினைப் பொறுத்ததே அவ்வுதவியின் அளவுமாகும்.


Translation:

The kindly aid's extent is of its worth no measure true;

Its worth is as the worth of him to whom the act you do.

Explanation:

The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

No comments:

Post a Comment