குறள் 96:
"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்."
மு.வரதராசனார் உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
பரிமேலழகர் உரை:
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை ஆராய்ந்தறிந்து இனிமையானவற்றைச் சொல்லுவானானால், அவனுக்குத் தீமைகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும்.
Translation:
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
Explanation:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
No comments:
Post a Comment