Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, August 26, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை.

 குறள் 128:

"ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்."

மு.வரதராசனார் உரை:

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

பரிமேலழகர் உரை:

தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை:

ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தீய சொற்களினுடைய தன்மைகளில் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்கு பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும்.

Translation:

Though some small gain of good it seem to bring,

The evil word is parent still of evil thing.

Explanation:

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

No comments:

Post a Comment