Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 31, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: புறங்கூறாமை.

 குறள் 184:

"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்."

மு.வரதராசனார் உரை:

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

பரிமேலழகர் உரை:

கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவனுக்கு முன்பாக நின்று தாட்சண்யமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; முன்னே இல்லாதபோது பின்னால் தனக்கு வரும் தீமையினைக் கருதாத சொற்களைச் சொல்லாது இருப்பாயாக.

Translation:

In presence though unkindly words you speak, say not

In absence words whose ill result exceeds your thought.

Explanation:

Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

No comments:

Post a Comment