Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 24, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.

 குறள் 93:

"முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்."

மு.வரதராசனார் உரை:

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பரிமேலழகர் உரை:

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

முகத்தினால் விரும்பி இனிமையாகப் பார்த்து மனத்துடன் பொருந்திய இனிய சொற்களைச் சொல்லுவதில் அமையப் பெற்றதே அறமாகும்.

Translation:

With brightly beaming smile, and kindly light of loving eye,

And heart sincere, to utter pleasant words is charity.

Explanation:

Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

No comments:

Post a Comment