குறள் 160:
"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்."
மு.வரதராசனார் உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
பரிமேலழகர் உரை:
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உண்ணாமல் நோன்பு நோற்றுத் தவம் செய்பவர்கள், எல்லோரினும் பெரியவர்களாவார்கள். அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்கு அடுத்தே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள்.
Translation:
Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
Explanation:
Those who endure abstinence from food are great, next to those who endure the unc ourteous speech of others.
No comments:
Post a Comment