Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 24, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.

 குறள் 95:

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற."

மு.வரதராசனார் உரை:

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை:

தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

பரிமேலழகர் உரை:

ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பணிந்து நடத்தலும், இன்சொல்லும் ஆகிய இரண்டும் ஒருவருக்கு அணிகலன்களாகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.

Translation:

Humility with pleasant speech to man on earth,

Is choice adornment; all besides is nothing worth.

Explanation:

Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

No comments:

Post a Comment