Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, August 25, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை.

 குறள் 118:

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி."

மு.வரதராசனார் உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

பரிமேலழகர் உரை:

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.).

மணக்குடவர் உரை:

சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது. இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

முன்பு சமமாக இருந்து, வாய்த்த பாரத்தினை அளவு காட்டுவதாகிய துலாக்கோல்போல், நன்கு அமைந்திருந்து ஒரு பக்கமாகச் சாயாமலிருப்பது பெரியோர்களுக்கு அழகாகும்.

Translation:

To stand, like balance-rod that level hangs and rightly weighs,

With calm un biased equity of soul, is sages' praise.

Explanation:

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

No comments:

Post a Comment