Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 28, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை.

 குறள் 158:

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்."

மு.வரதராசனார் உரை:

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

பரிமேலழகர் உரை:

மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.).

மணக்குடவர் உரை:

தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மனதில் செருக்குக் கொண்டு தீமையானவற்றைச் செய்பவர்களைத் தாம் தம்முடைய பொறுமையினால் வென்றுவிடவேண்டும்.

Translation:

With overweening pride when men with injuries assail,

By thine own righteous dealing shalt thou mightily prevail.

Explanation:

Let a man by patience overcome those who through pride commit excesses.

No comments:

Post a Comment