Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, August 26, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை.

 குறள் 124:

"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது."

மு.வரதராசனார் உரை:

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

பரிமேலழகர் உரை:

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை:

தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியானது மலையின் உயர்ச்சியினைவிட மிகவும் பெரியதாகும்.

Translation:

In his station, all unswerving, if man self subdue,

Greater he than mountain proudly rising to the view.

Explanation:

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.

No comments:

Post a Comment