குறள் 188:
"துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு."
மு.வரதராசனார் உரை:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.
சாலமன் பாப்பையா உரை:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.
பரிமேலழகர் உரை:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை:
தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்முடன் நெருங்கிப் பழகுபவர்களுடைய குற்றத்தினையும் அவரில்லாதபோது தூற்றிப் பேசுபவர்கள் அயலார் மாட்டுச் செய்வது யாதோ?.
Translation:
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?.
Explanation:
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?.
No comments:
Post a Comment