Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 31, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வெஃகாமை.

 குறள் 173:

"சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்."

மு.வரதராசனார் உரை:

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

பரிமேலழகர் உரை:

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.].

மணக்குடவர் உரை:

சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அறத்தான் வரக்கூடிய நிலையான இன்பத்தினை விரும்புகிறவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து அடையும் சிறிய இன்பத்திற்கு ஆசைப்பட்டுத் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள்.

Translation:

No deeds of ill, misled by base desire,

Do they, whose souls to other joys aspire.

Explanation:

Those who desire the higher pleasures [of heaven] will not act unjustly through desire of the trifling joy. [in this life].

No comments:

Post a Comment