குறள் 115:
"கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி."
மு.வரதராசனார் உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
பரிமேலழகர் உரை:
கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.).
மணக்குடவர் உரை:
கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கெடுதியும் பெருக்கமும் யாவர்க்கும் இல்லாததல்ல; அவை பிறவியிலேயே அமைந்து கிடைப்பனவாகும். ஆதலால், மனத்தில் ஓரவஞ்சனையின்றி - ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடாமல் நடுவு நிலைமையுடன் இருப்பதே பெரியவர்களுக்கு அழகாகும்.
Translation:
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
Explanation:
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
No comments:
Post a Comment