Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, August 27, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.

 குறள் 133:

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்."

மு.வரதராசனார் உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

பரிமேலழகர் உரை:

ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).

மணக்குடவர் உரை:

ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒழுக்கமுள்ளவனாக இருத்தல் என்பது நற்குடியிற் பிறந்துள்ளவன் என்பதற்கு அடையாளமாகும். அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் தாழ்ந்து இழிதொழில் பிறவியானவன் என்பதாக்கிவிடும்.

Translation:

'Decorum's' true nobility on earth;

'In-decorum's' issue is ignoble birth.

Explanation:

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

No comments:

Post a Comment