Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, August 26, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை.

 குறள் 125:

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து."

மு.வரதராசனார் உரை:

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

பரிமேலழகர் உரை:

பணிதல் எல்லோர்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம். செல்வம் - மிகுதி.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பணிந்து அடங்கி வாழ்தல் எல்லோருக்கும் நல்லதாகும். அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்குப் பணிவு இருந்து விட்டால், வேறொரு செல்வம் சேர்ந்தது போன்ற சிறப்பினையுடையதாகும்.

Translation:

To all humility is goodly grace; but chief to them

With fortune blessed, -'this fortune's diadem.

Explanation:

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.

No comments:

Post a Comment