குறள் 182:
"அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை."
மு.வரதராசனார் உரை:
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
பரிமேலழகர் உரை:
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.).
மணக்குடவர் உரை:
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய்வதைவிடத் தீமையானதாகும்.
Translation:
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.
Explanation:
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
No comments:
Post a Comment