Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 24, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.

 குறள் 98:

"சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்."

மு.வரதராசனார் உரை:

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

பரிமேலழகர் உரை:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை:

புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்பதாகும்.

Translation:

Sweet kindly words, from meanness free, delight of heart,

In world to come and in this world impart.

Explanation:

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

No comments:

Post a Comment