குறள் 164:
"அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து."
மு.வரதராசனார் உரை:
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.).
மணக்குடவர் உரை:
அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பொறாமையினால் தமக்குத் துன்பம் வருவதை அறிந்தவர்கள், பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.
Translation:
The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
Explanation:
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
No comments:
Post a Comment