Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, August 27, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.

 குறள் 136:

"ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து."

மு.வரதராசனார் உரை:

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

பரிமேலழகர் உரை:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.).

மணக்குடவர் உரை:

ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து. இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒழுக்கம் கேட்டுவிடுவதால் இழிகுலமாகும் என்பதாக வருகின்ற குற்றத்தினைத் தெரிந்த மனா வலிமை கொண்ட பெரியோர்கள் ஒழுக்கத்திலிருந்து குறைந்துவிட மாட்டார்கள்.

Translation:

The strong of soul no jot abate of 'strict decorum's' laws,

Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.

Explanation:

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

No comments:

Post a Comment