குறள் 220:
"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து."
மு.வரதராசனார் உரை:
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
பரிமேலழகர் உரை:
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
மணக்குடவர் உரை:
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.
Translation:
Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.
Explanation:
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.
No comments:
Post a Comment