குறள் 444:
"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை."
மு.வரதராசனார் உரை:
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
பரிமேலழகர் உரை:
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை.
(பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.).
மணக்குடவர் உரை:
தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறிவு முதலியவற்றினால் தம்மைவிட மிகுந்தவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டு நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளைக் காட்டிலும் தலைமையானதாகும்.
Translation:
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.
Explanation:
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
No comments:
Post a Comment