Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, September 16, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.

 குறள் 395:

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்."

மு.வரதராசனார் உரை:

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

பரிமேலழகர் உரை:

உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.

(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.

இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செல்வர்கள் முன்னே வறியவர்கள் நிற்றல் போல, தம்முடைய ஆசிரியர் முன்னே நின்று கல்வி கற்றவர்களே உயர்ந்தோராவர். அவ்வாறு கற்பதற்கு நாணமுற்றுக் கல்லாதவர்கள் இழிந்தோரேயாவார்.

Translation:

With soul submiss they stand, as paupers front a rich man's face;

Yet learned men are first; th'unlearned stand in lowest place.

Explanation:

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.

No comments:

Post a Comment