Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல்.

 குறள் 437:

"செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்."

மு.வரதராசனார் உரை:

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

பரிமேலழகர் உரை:

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.

(செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை:

பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செல்வத்தினால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் உலோபியாக அதனிடம் மிகுந்த பற்று வைத்திருப்பனுடைய செல்வம், பின்னை இல்லாததாகிக் கெட்டுவிடும்.

Translation:

Who leaves undone what should be done, with niggard mind,

His wealth shall perish, leaving not a wrack behind.

Explanation:

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

No comments:

Post a Comment