Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 17, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.

 குறள் 417:

"பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்."

மு.வரதராசனார் உரை:

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

பரிமேலழகர் உரை:

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.

('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

மணக்குடவர் உரை:

ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.

Translation:

Not e'en through inadvertence speak they foolish word,

With clear discerning mind who've learning's ample lessons heard.

Explanation:

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).

No comments:

Post a Comment