குறள் 452:
"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு."
மு.வரதராசனார் உரை:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
பரிமேலழகர் உரை:
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.
(எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) .
மணக்குடவர் உரை:
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நீரானது, தான் சேர்ந்த நிலத்தினாலே மாறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல, மனிதர்க்கு அறிவானது தாம் சேர்ந்த இனத்தினாலே வேறுபட்டு அந்த இனத்தின் தன்மையதாகிவிடும்.
Translation:
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation:
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
No comments:
Post a Comment