Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.

 குறள் 423:

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு."

மு.வரதராசனார் உரை:

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

பரிமேலழகர் உரை:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.

(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.).

மணக்குடவர் உரை:

யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளினுடைய உண்மையான கருத்தின் பயனைக் காணும் வல்லமையுள்ளது அறிவாகும்.

Translation:

Though things diverse from divers sages' lips we learn,

'This wisdom's part in each the true thing to discern.

Explanation:

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

No comments:

Post a Comment