Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 22, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 461:

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்."

மு.வரதராசனார் உரை:

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

பரிமேலழகர் உரை:

அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.

(உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம'¢ என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.).

மணக்குடவர் உரை:

வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தொழில் செய்யும்போது, அப்போது அதனால் வரும் அழிவினையும், பிறகு ஆவதனையும், ஆனபிறகு தரும் ஊதியத்தினையும் சீர்தூக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும்.

Translation:

Expenditure, return, and profit of the deed

In time to come; weigh these- than to the act proceed.

Explanation:

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

No comments:

Post a Comment