Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 17, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.

 குறள் 415:

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்."

மு.வரதராசனார் உரை:

கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

சாலமன் பாப்பையா உரை:

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

பரிமேலழகர் உரை:

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.

(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்' என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை:

வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடந்து போகின்றவர்களுக்கு ஊன்றுகோல் போல, துன்பம் வந்த காலத்தில் ஒழுக்கமுடையவர்களுடைய வாயிலிருந்து வரும் சொற்கள் துணையாக நின்று உதவும்.

Translation:

Like staff in hand of him in slippery ground who strays

Are words from mouth of those who walk in righteous ways.

Explanation:

The words of the good are like a staff in a slippery place.

No comments:

Post a Comment