Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 446:

"தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்."

மு.வரதராசனார் உரை:

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

பரிமேலழகர் உரை:

தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.

(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.).

மணக்குடவர் உரை:

தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.

இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்லவர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லையாகும்.

Translation:

The king, who knows to live with worthy men allied,

Has nought to fear from any foeman's pride.

Explanation:

There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

No comments:

Post a Comment