Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல்.

 குறள் 435:

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."

மு.வரதராசனார் உரை:

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

பரிமேலழகர் உரை:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும்.

('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.).

மணக்குடவர் உரை:

துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும். இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

குற்றம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை அக்குற்றம் வந்தால் நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோலினைப் போல அழிந்துவிடும்.

Translation:

His joy who guards not 'gainst the coming evil day,

Like straw before the fire shall swift consume away.

Explanation:

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

No comments:

Post a Comment