Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 22, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 462:

"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்."

மு.வரதராசனார் உரை:

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

பரிமேலழகர் உரை:

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

(ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் தொழிலினை ஆராய்ந்து எண்ணிச் செய்து முடிக்க வல்லவர்களுக்கு அடைவதற்கு அரிய பொருள் யாதொன்றும் இல்லை.

Translation:

With chosen friends deliberate; next use the private thought;

Then act. By those who thus proceed all works with ease are wrought.

Explanation:

There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

No comments:

Post a Comment