குறள் 413:
"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
மு.வரதராசனார் உரை:
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
பரிமேலழகர் உரை:
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
(செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
செவி உணவாகிய கேள்வியினையுடையவர்கள், பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவி உணவினையுடைய தேவர்களோடு ஒப்பாவார்கள்.
Translation:
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.
Explanation:
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
No comments:
Post a Comment