Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 22, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 475:

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்."

மு.வரதராசனார் உரை:

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா உரை:

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

பரிமேலழகர் உரை:

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.

(உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மயிலிறகு ஏற்றி வைக்கப்பட்ட வண்டியும் அச்சு முறிவதாகிவிடும்; எப்போதும் என்றால், அம்மயிலிறகானது மிகவும் அதிக்கப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டால் என்பதாம்.

Translation:

With peacock feathers light, you load the wain;

Yet, heaped too high, the axle snaps in twain.

Explanation:

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

No comments:

Post a Comment