Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 22, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 470:

"எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு."

மு.வரதராசனார் உரை:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

பரிமேலழகர் உரை:

தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.

('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தொழிலினை முடிப்பதற்காக வேண்டித் தம் நிலைமைக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்வாராயின், உலகம் தம்மை இகழும். ஆதலால், இகழப்படாத வழிமுறைகளை நாடிச் செய்தல் வேண்டும்.

Translation:

Plan and perform no work that others may despise;

What misbeseems a king the world will not approve as wise.

Explanation:

Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

No comments:

Post a Comment