குறள் 457:
"மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்."
மு.வரதராசனார் உரை:
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
பரிமேலழகர் உரை:
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனம் நன்றாக இருப்பது செல்வத்தினைத் தரும். இனமானது நன்றாக இருப்பதானது எல்லாப் புகழினையும் கொடுக்கும்.
Translation:
Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.
Explanation:
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
No comments:
Post a Comment