Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல்.

 குறள் 431:

"செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து."

மு.வரதராசனார் உரை:

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

பரிமேலழகர் உரை:

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.

(மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செருக்கும் (மதமும்), கோபமும், காமமும், ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம்பாடான தன்மையினை உடையதாகும்.

Translation:

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,

To sure increase of lofty dignity attain.

Explanation:

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

No comments:

Post a Comment