குறள் 449:
"முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை."
மு.வரதராசனார் உரை:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.
பரிமேலழகர் உரை:
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
(முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.).
மணக்குடவர் உரை:
முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முதற்பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாகும். அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்களுக்கு அதனால் வரும் உறுதியான நிலை இல்லையாகும்.
Translation:
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.
Explanation:
The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
No comments:
Post a Comment