குறள் 443:
"அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்."
மு.வரதராசனார் உரை:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
பரிமேலழகர் உரை:
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.).
மணக்குடவர் உரை:
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல், அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும்.
Translation:
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.
Explanation:
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
No comments:
Post a Comment