Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 17, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.

 குறள் 416:

"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்."

மு.வரதராசனார் உரை:

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

பரிமேலழகர் உரை:

எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.

('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை:

எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

Translation:

Let each man good things learn, for e'en as he

Shall learn, he gains increase of perfect dignity.

Explanation:

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

No comments:

Post a Comment