குறள் 463:
"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்."
மு.வரதராசனார் உரை:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.
('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.).
மணக்குடவர் உரை:
தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார்.
இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பின்பு வரக்கூடிய ஊதியத்தினைக் கருதி முன்பு பெற்றுள்ள முதலையும் இழப்பதற்குக் காரணமான தொழிலினை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.
Translation:
To risk one's all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.
Explanation:
The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.
No comments:
Post a Comment