Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 24, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.

 குறள் 86:

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு."

மு.வரதராசனார் உரை:

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா உரை:

வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

பரிமேலழகர் உரை:

செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து அனுப்பி வைத்து, வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவருடன் உண்ண இருப்பவன் வானத்தவர்க்கு நல்ல விருந்தினனாவான்.

Translation:

The guest arrived he tends, the coming guest expects to see;

To those in heavenly homes that dwell a welcome guest is he.

Explanation:

He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.


No comments:

Post a Comment