குறள் 70:
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்."
மு.வரதராசனார் உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
பரிமேலழகர் உரை:
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது).
மணக்குடவர் உரை:
மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால், "இப்பிள்ளையைப் பெற இத்தந்தை என்ன நோன்பு நோற்றானோ?" என்று பிறர் சொல்லும் சொல்லினை உண்டாக்குவதாகும்.
Translation:
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.
Explanation:
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.
No comments:
Post a Comment