Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, August 19, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.

 குறள் 57:

"சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை."

மு.வரதராசனார் உரை:

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

சாலமன் பாப்பையா உரை:

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

பரிமேலழகர் உரை:

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:

மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும்.

Translation:

Of what avail is watch and ward? Honor's woman's safest guard.

Explanation:

What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

No comments:

Post a Comment