குறள் 190:
"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு."
மு.வரதராசனார் உரை:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.
சாலமன் பாப்பையா உரை:
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.
பரிமேலழகர் உரை:
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.].
மணக்குடவர் உரை:
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மற்றவர்களுடைய குற்றத்தினைக் கண்டு பேசுவது போலத் தன்னுடைய குற்றத்தினையும் காணும் தன்மை உடையவனானால், அவனுடைய நிலைபேறுடைய உயிர்க்கு உண்டாவதொரு தீமை உண்டோ?.
Translation:
If each his own, as neighbors' faults would scan,
Could any evil hap to living man?.
Explanation:
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?.