Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, August 13, 2020

Tirukkural - திருக்குறள் | குறள் பால்: அறத்துப்பால் | குறள் இயல்: பாயிரவியல் | அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

 குறள் 4:

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."

மு.வரதராசனார் உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

பரிமேலழகர் உரை:

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).

மணக்குடவர் உரை:

இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.

Translation:

His foot, 'Whom want affects not, irks not grief,' who gain

Shall not, through every time, of any woes complain.

Explanation:

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

No comments:

Post a Comment