குறள் 47:
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை."
மு.வரதராசனார் உரை:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
பரிமேலழகர் உரை:
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.).
மணக்குடவர் உரை:
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இல்லறத்திற்குரிய இயல்புகளுடனே இல்வாழ்க்கை நடத்துபவன், ஆசைகளை அடக்கிவாழும் துறவிகள் எல்லோரினும் மேலானவன்.
Translation:
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.
Explanation:
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
No comments:
Post a Comment